திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோவில்
- BY ssachid
- April 19, 2026
- 0 Comments
- 15 Views



அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
கிருத யுகத்திலிருந்து உள்ள இக்கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் அமைந்துள்ளதுசோழர் கால கோவில்களானஇரண்டும், இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை. சூரியனின் தேரோட்டியான அருணன் அந்த பதவியைப் பெற மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் முயன்ற போது, சூரியனால் உடல் குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டு கேலி செய்யப்பட்டதால், சிவபெருமான் சூரியனை ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறு உணர்ந்து, சாபம் தீர தவம் செய்து சிவபெருமான அருளால் தன் கருமை நிறம் விடுபட்டு இங்கு வெளிச்சம் பெற்ற தலம். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் ’மீயச்சூர்’ என்று வழங்கப்படுகிறது.
தலசிறப்புகள்:
மூலவர்: ஸ்ரீமேகநாதர் (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர்)
உற்சவர்: பஞ்சமூர்த்தி,
தாயார்: ஸ்ரீலலிதாம்பிகை (சாந்தநாயகி)
தலவிருட்சம்: வில்வமரம்,
தீர்த்தமாக சூர்ய புஷ்கரணியுள்ளது. சம்பந்தரால் பாடல்பெற்ற தலம். கருடன்,
அருணன் (சூரியனின் தேரோட்டி), வாலி,சுக்ரீவன், எமன்.சனீஸ்வரன் போன்றோர் புராண காலங்களில் இங்குதான் பிறந்தவர்கள்.
அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம். ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார். திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது.
இங்கு உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாக உள்ள மூர்த்தியின் வடிவம் சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என்று அழைக்கின்றனர். இச்சிற்பத்தில் அம்பாளின் முகத்தில் வலது புறம் கோபமாகவும், இடது புறம் பார்த்தால் புன்னகை தவழும் நிலையிலும் இருப்பதைக் காணலாம்.
உலகில் கணவன் – மனைவிக்கான இணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது.
தலவரலாறின்படி காசிப முனிவரின் மனைவிகளான வினதை, கர்த்துரு ஆகிய இருவரும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பிள்ளைபேறு பெற்றனர்.
சூரிய பகவான் இங்கு தவமியற்றி சாப விமோசனம் பெற்றார்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை 21 லிருந்து 27 வரை சூரிய கிரணங்கள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது பட்டு வழிபடும்.
1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால், அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர்.
ஆண்டுக்கணக்கில் அபிசேகம் செய்திருந்ததில் அபிசேகப் பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு தங்கக்கொலுசு அணிவிக்கப்பட்டது, கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்சனைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோசங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றிற்கும் இந்த தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகின்றது. இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சிவபெருமானுக்கு படைத்த பின்னர் நோய்க்கு பரிகாரமாக உண்பர்.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்





