Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள்

நமக்கு நாமே தோழராக…

பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மோடு கூடவே வருவது நாம் மட்டும் தான். ஆகவே, இந்த உலகத்தினையும் அதில் வாழும் மனிதர்களையும், நம் உறவுகளையும் பற்றிப் புரிந்து கொள்வதற்கு முன், நாம் நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம்மைப்பற்றி சரியாகப் புரிந்து கொண்டு நமக்கு நாமே நல்ல தோழராக வாழப் பழகி விட்டால் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக வாழலாம்.

பொதுவாகவே மனித மனம் தனிமையில் வாழப் பழக்கப்படவில்லை. எப்போதும் துணையாக, தோழமையோடு யாராவது தனக்காக இருந்து விட வேண்டும் என்பதே அதன் அவா. ஆனாலும், ஆதி முதல் அந்தம் வரை நம் கூடவே வரும்படி எந்த உறவும் அமைவதில்லை. தாய் தந்தை முதல் அத்தனை உறவுகளும் ஏதோ ஒரு கணத்தில் பிரிந்து செல்ல வேண்டியது கட்டாயமாகின்றது. இதனால் பிரிவுகள் நேரும் ஒவ்வொரு தடவையும் நம் மனம் உருக்குலைந்து போகின்றது. மீண்டும் ஒரு புது உறவைக் தேடி மனம் அலை பாயத்தொடங்குகன்றது. முன்பு நம்மோடு இருந்த உறவுகளின் அடையாளங்களைப் புது உறவில் அது தேடுகின்றது. தான் தேடுவது கிடைக்காத பட்சத்தில் தன்னைத்தானே அது வருத்திக் கொண்டு துன்பத்தில் உழல்கிறது. இந்த வேதனைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வழி தான் நமக்குரிய தோழராக நம்மையே மாற்றிக் கொள்வது.

இதைக் கேட்கும் போது கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும். ஆனால் உங்களை விடச் சிறந்த தோழரை இந்த உலகில் வேறு எங்கும் நீங்கள் கண்டு விட முடியாது. உங்களுக்குள் இருக்கும் அந்த தோழரை நீங்கள் கண்டு பிடித்து விட்டால், இந்த உலகில் மிகவும் நிம்மதியாக இருக்கும் ஒரு நபர் நீங்களாக தான் இருப்பீர்கள். உங்களை விட உங்களைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். எங்கள் ஆசைகள் தேவைகள் விருப்பங்கள் என அத்தனையும் மனதுள் போட்டுப் புதைத்து விட்டு உலகுக்காக வாழப் பழகி விட்ட எம்மால் எமக்கான அடையாளங்களைத் தேடிப்பிடித்து வெளிப்படுத்துவது கொஞ்சம் சிரமாமாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு தடவை அதனைப் பற்றிக் கொண்டு விட்டால், இதுதான் நான் என்ற அடையாளத்தை இந்த உலகுக்கு வெளிப்படுத்தி விட்டால் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழலாம்.

இதற்கு முதலில் நாம் யார் என்பதை நாம் கண்டு பிடிக்க வேண்டும். இதுதான் நான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். என் குறைகளையும் நிறைகளையும் முழுமனதோடு அங்கீகரிக்க வேண்டும். எனது தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் மற்றவற்றின் மீது பழி போடாது நானே பொறுப்பேர்க்கும் தைரியம் வேண்டும். அடுத்தவர்களை எதற்கும் எதிர்பாராது, எமக்கான வாழ்வினை நாமேதான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும். இதெற்கெல்லாவற்றிற்கும் அடிப்படையாக எமக்கு நாம் நல்ல தோழராக வேண்டும்.

நமது சரி பிழைகளை கலந்தாலோசிப்பதற்கும் , நமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், நமக்கான ஆறுதல்களை, ஆலோசனைளைப் பெற்றுக் கொள்வதற்கும் வெளியில் உள்ள யாரோ ஒருவரைத் தேடி அலைவதை விட எப்போதும் நம்முடனேயே இருக்கும் நம்மிடமே அதனைப் பெற்றுக் கொள்வது மிகவும் இலகுவானதாக இருக்கும். எந்தளவுக்கு நெருக்கமான ஒருவராக இருந்தாலும் முற்று முழுதாக அவரிடம் நம்மை, நமது பிரச்சினைகளை, நமது தேவைகளை வெளிப்படுத்த முடியாது. அவ்வாறான சூழ்நிலையில் நமக்கு நூறு வீதம் பொருத்தமாக இருக்கக் கூடிய ஒரு ஆலோனையை அவரால் கூறி விட முடியாது. ஆனால், நம்மைப் பற்றி நமக்குத் தெரியாதது எதுவும் இருக்காது. ஆகவே, நம்மோடு கலந்து பேசி நமக்கு நாமே எடுத்துக் கொள்ளும் தீர்மானங்கள் எப்போதும் மிகச் சிறப்பாகவே இருக்கும். அதனாலேயே எம் வாழ்வின் சிறந்த தோழராக, ஆலோசகராக நாமே இருந்து விடுதல் சிறப்பு.

இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். நம்மோடு நாம் எப்படிப் பேசுவது? எப்படி கலந்தாலோசிப்பது? எப்படி தீர்மானம் எடுப்பது?

உதாரணமாக நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு ஒரு பிரச்சினை என்று அவர் வந்து எம்மிடம் ஆலோசனை கேட்கிறார். நாம் சொல்லும் ஆலோசனை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. மீண்டும் வேறு ஒரு ஆலோசனை சொல்கிறோம். இப்படியாக அவர் திருப்தி அடையும் வரை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் சிந்தித்து அவருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுத்து விட முயற்சி செய்கிறோம். இவ்வாறே நமக்கு ஒரு பிரச்சினை வரும் போது, நாமே நம்முடைய நண்பராக இருந்து நமக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆலோசிக்கும் போது சிறந்ததொரு தீர்வினை அடைய வழி பிறக்கும். அதைவிடவும் நமது பிரச்சினைகளில் இருந்து தள்ளி நின்று சிந்திக்கும் போது தான் அதன் உண்மைத்தன்மை நமக்குப் புரியும். உண்மையிலேயே இது தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனையா? அல்லது போலியாக உருவாக்கப்பட்ட பிரச்சனையா? காலப்போக்கில் அது தீர்ந்து விடக்கூடியதா?என்பது பற்றிய தெளிவு பிறக்கும். சில சமயங்களில் நமது பிரச்சினைகளுக்கு நாமே தான் காரணமாக இருப்போம். இது புரியாமல் வெளியே தீர்வினைத் தேடிக் கொண்டிருப்போம். இவ்வாறான குழப்பங்களில் இருந்து வெளி வருவதற்கு நம்முடனான உரையாடல் நமக்கு பெரும் உதவியாக இருக்கும்.

நமக்கு நாமே நல்ல தோழராகி, நம் கஸ்ர நஷ்டங்களை நம்முடனேயே பகிர்ந்து கொண்டு, நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாமே கண்டுகொள்ளப் பழகி விட்டால், இந்த உலகின் எந்த செயற்பாடுகளும் நம்மைப் பாதிக்காத வண்ணம் நிம்மதியாக வாழலாம். எந்த இழப்பையும், பிரிவையும், வேதனைகளையும் நாம் அனுபவிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

சிவகௌரி (சுடரி)
வவுனியா
இலங்கை

You may also like

ஊர் புதினம் கட்டுரைகள்

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றி இளைப்பாறிய உதவி அதிபர் திரு.செல்வச்சந்திரன்..

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றிய தனது நினைவலைகளிருந்து அதன் ஆரம்ப ஆசிரியரும் இளைப்பாறிய உதவி அதிபருமான திரு.செல்வச்சந்திரன் அவர்கள் எமக்குதந்த குறிப்புகளின் படி இக்
கட்டுரைகள்

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். இந்த பிறவி குணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆத்திரக்காரனுக்கு