Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

சிறுவர் பக்கம் படைப்பாக்கம்

காத்திருப்பு – சுடரி குட்டிக்கதை

தினமும் அந்த பேரூந்து தரிப்பிடத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சென்றவண்ணமே இருக்கின்றனர். ஆனாலும் ஒருவர் கண்ணில் கூட படவில்லை, கண்களில் ஏக்கத்தோடு அங்கு வருபவர்களின் முகத்தில் தன்மீதான கருணை உள்ளம் கொண்டவரை தேடிக்கொண்டிருக்கும் அந்த குட்டி நாயின் உருவம்.

ஒரு தூணின் ஓரத்தில் பரிதாபமாக பார்த்துக்கொண்டு, தினமும் யாரிடமிருந்தாவது தனக்கு கொஞ்சம் அன்பு கிடைக்காதா என தேடுவது போல் அது தவிப்போடு காத்திருக்கிறது. யாராவது தன்மேல் கருணை காட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதன் ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது. யாரையும் நெருங்க தயக்கத்துடனும் யாரிடமாவது நெருங்கிவிட வேண்டும் என்ற விருப்புடனும் அது தினமும் தத்தளித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் அதன் வாழ்வில் வசந்தம் வீசியது. யாருக்காகவோ நீண்ட நேரம் காத்திருந்த ஒருவரின் பார்வை அதன் மீது பட்டது. அவருக்கும் ஏனோ அதனை மிகவும் பிடித்து விட்டது. அதன் பரிதாபமான தோற்றமோ, அல்லது அதன் கண்களில் தெரிந்த ஏக்கமோ அவரது பார்வையை அதன் மீதிருந்து அகலாது கட்டிப்போட்டு வைத்தது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை அவருக்குள் ஏற்படுத்தியது. தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தைப் பிரித்து சிறிது உணவை எடுத்து அதற்கு போட்டு விட்டார். அது மிகவும் நன்றியோடு வாலாட்டியது.

தனக்கு கிடைத்த உணவை விட தன்மீது ஒருவர் காட்டிய பாசமே அதற்கு பெரிதாக தோன்றியது. அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அவரது காலடியையே அது சுற்றிச்சுற்றி வந்தது.

துள்ளிக்குதித்து வட்டமிட்டு வட்டமிட்டு வாலாட்டியது. அதன் செயல்களை பார்த்தவருக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. தன்னால் ஒரு உயிர் சந்தோசமாக இருப்பதை எண்ணி அவருக்கு பெருமையாக இருந்தது.

ஆனாலும், அந்த குட்டி நாயின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதுவரை நேரமும் அதனோடு விளையாடிக்கொண்டிருந்தவர், இதுவரை தான் யாருக்காக காத்திருந்தாரோ அவர் வந்ததும் அதனை பார்த்து ஒரு புன்னகையை சிந்தி விட்டு அவரோடு சென்று விட்டார். அவர் சென்று விட்டது அதற்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் சிறிதளவு நேரமாவது தன் மீது பாசத்தைக் காட்ட இப்பெரிய பூவுலகில் ஒருவராவது இருக்கின்றாரே என்ற எண்ணமே அன்று முழுவதும் அதனை மகிழ்வோடு வைத்திருக்க போதுமானதாக இருந்தது.

இப்பொழுது அதன் எதிர்பார்ப்பு எல்லாம் அவர் மீண்டும் எப்போது வருவார் என்பது மட்டுமே.

சிவகௌரி (சுடரி)
வவுனியா
இலங்கை

You may also like

சிறுவர் பக்கம்

We all deserve to be treated equally…

  • December 24, 2021
This is a drawing that I have created, to support the BLM movement. I used markers and coloured pencils to
படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்