திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் , மயிலாடுதுறை – திருவாரூர் பேருந்து சாலையில், காங்கலாஞ்சேரிக்கு அடுத்துள்ள திருவிற்குடி எனுமூரில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
நாயன்மார்கள் பாடல் பெற்றதால் 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. சோழர் காலத்தில் கற்கோவிலாக மாற்றப்பட்டு, பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் விரிவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
ஜலந்தராசுரன், பிரம்மாவிடம் அழியாத வரம் பெற்றிருந்தான்அவனது மனைவியான பிருந்தை கற்பு நெறியில் பிழையாதவரை அவனுக்கு அழிவில்லை எனவும் வரமிருந்தது. தேவர்களின் துயரம் தாங்காத சிவபெருமான், ஜலந்தரனை அழிக்க மகாவிஷ்ணுவின் உதவியால், ஜலந்தரன் உருவில் வந்த விஷ்ணுவை தன் கணவன் என எண்ணியதன் பின்பு , சிவபெருமான் ஜலந்தரனை சக்கராயுதம் (ஆழி) கொண்டு அவனது கையால் அவனை வதம் செய்தார். மாணிக்கவாசகர் இதனை “சலமுடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல்லாழி” என்று இத்தலத்தின் பெருமையை திருவாசகத்தில் பாடுகிறார்.
திருமால், சலந்தரனின் மனைவி பிருந்தையால் வழிபடப்பட்டவர். மூலவர் சுயம்பு, சதுர ஆவுடையாராகவுள்ளார். மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. மகாவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிருந்தை துளசியாக மாறிய இடமும், மகாவிஷ்ணு வழிபட்ட சிவ சன்னதியும் இங்குள்ளன.
அம்மன் தெற்கு நோக்கித் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதிக்கு முன்புள்ள மண்டபத்தின் கூரையில் 12 இராசிகளின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அந்தந்த இராசிக்கு கீழ் நின்று வணங்கினால் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோச நிவர்த்தி கிடைக்கும்.
முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், அதற்கு இங்கு வழிபட்டால் தோசம் நீங்கும் என்பது நம்பிக்கை.